மருத்துவரின் பரிந்துரையின்றி எச், எச்1 வகை மருந்துகளை விற்பனை செய்ய தடை-ஆட்சியர் வல்லவன் பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரி அரசும், மருந்து கட்டுப்பாட்டு துறையும் மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், போதை பொருட்கள் பயன்படுத்துவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஒவ்வொரு மருந்து கடைகளிலும் பொருத்தும் நிகழ்ச்சியின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சியர் வல்லவன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். இதில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், மருந்து வணிகர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில் அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மருந்து வகைகளை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல் விற்க இயலாது என்ற வாசகங்கள் இடம் பெற்ற விழிப்புணர்வு பதாகைகளை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அனைத்து மருந்தகங்களிலும் வழங்கி வெளியில் பொருத்தும் படி அறிவுறுத்தினார்கள். பின்னர், ஆட்சியர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் எச் மற்றும் எச்1 வகை சார்ந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இன்றி விற்பனை செய்யக் கூடாது.

போதை பழக்க வழக்கங்களை ஒழிக்கும் வகையில் இதுபோன்ற மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், புதுச்சேரியில் போதை பொருட்கள் கிடைக்கும் என்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதில்லை என்ற விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து மருந்தகங்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. என்றார்.

Related Stories: