நீலகிரி மாவட்டத்திற்கென பொருளாதாரம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக முதன்மை திட்டம் தயாரிக்க வேண்டும்

*மேம்பாட்டு திட்ட இயக்குநர் தகவல்

ஊட்டி :   நீலகிரி மாவட்டத்திற்கென பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல்  பாதுகாப்பு ஆகியவை இணைந்த முதன்மை திட்டம் தயாரிக்க வேண்டியது  அவசியமாகிறது என சிறப்பு பகுதி மேம்பாட்டு  திட்டத்தின் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் சார்பில்  நீலகிரி மாவட்டத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் அனைத்து சமூக நன்மை  உள்ளடக்கிய மண்டலமாக மாற்றுவது தொடர்பாக நீலகிரி மண்டல செயலாக்க திட்டம்  தயாரித்தல் (மாஸ்டர் பிளான்) - 2047 குறித்து அரசுத்துறை அலுவலர்கள்  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருடனான முதலாவது கலந்தாய்வு கூட்டம் நேற்று  நடந்தது.

 கோவை மற்றும் நீலகிரி மண்டலங்களுக்கு முதன்மை திட்டத்திைன  செயல்படுத்திட 2047-மண்டல திட்டம் தொடர்பான ஆலோசனை மதிப்பீடு மற்றும் மறு  ஆய்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பகுதி மேம்பாட்டு  திட்டத்தின் திட்ட இயக்குநர் மோனிகா ரானா பேசுகையில், ‘‘நீலகிரி  மாவட்டமானது 2549 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுச்சூழல்  முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. தேயிலை தோட்டங்கள்,  சோலை மரக்காடுகள், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய அரிய பல்வேறு வகை செடி  கொடிகள், தாவரங்கள் உள்ளன. புவியியல் ரீதியாக தென் பகுதியில் கேரளாவும்,  மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கர்நாடகாவும், கிழக்கு பகுதியில் கோவை  மாவட்டமும் நீலகிரியில் எல்லைகளாக உள்ளது. நிர்வாக ரீதியாக நீலகிரி  மாவட்டத்தில் 6 தாலுகாகள் உள்ளன.

51.4 சதவீதம் பேர் நகர்ப்புற பகுதிகளில்  வாழ்கின்றனர். நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க  லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில்  இருந்தும் வந்து செல்கின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த  நீலகிரி மாவட்டத்திற்கென பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல்  பாதுகாப்பு ஆகியவை இணைந்த முதன்மை திட்டம் தயாரிக்க வேண்டியது  அவசியமாகிறது. முதன்மை திட்டம் உருவாக்குதன் மூலம் சுற்றுச்சூழலை  பாதுகாப்பதுடன், விவசாய நிலங்கள், சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களும் பாதுகாக்க முடியும். இது தொடர்பாக கருத்துக்களை கேட்டறியும்  வகையில் முதல் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது, என்றார்.

மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசுகையில், ‘‘நீலகிரி  மாவட்டம் ஒரு மலை மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது.  இம்மாவட்டத்தில் எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்க  பங்குதாரர்கள் கூட்டம் அவசியம். இது செயலாக்க திட்டத்திற்கு முன்னோடியாக  அதன் தேவைகளை உணர உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்களின் பங்கேற்புடன்  மாவட்டத்தில் உள்ள சவால்கள், திறன்கள் மற்றும் வளர்ச்சிகளை அடையாளம்  காண்பதே கூட்டத்தின் நோக்கமாகும்.

 இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ்  உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான போபாலில் உள்ள திட்டமிடல்  மற்றும் கட்டிடக்கலை பள்ளி மூலம் மண்டல அளவிலான திட்டங்களை தயாரித்து கோவை  மற்றும் நீலகிரி மண்டலங்களுக்கு முதன்மை திட்டத்தை செயல்படுத்த சிறப்பு  பகுதி மேம்பாட்டு திட்ட திட்ட இயக்குநர் உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 கோவை மற்றும் நீலகிரி மண்டலங்களுக்கு முதன்மை  திட்டங்கள் குறித்து ஆரம்ப அறிக்கைகளை ஆய்வு செய்ய நகர மற்றும் ஊரக அமைப்பு  திட்டமிடல் இயக்குநரால் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் கடந்த ஜூலை மாதம்  நடத்தப்பட்டது. மாவட்டத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு  சுற்றுசூழலையும், வனவளங்களையும் பாதுகாப்பது அவசியம். இந்த திட்டம்  தயாரிப்பது தொடர்பாக முதலாவது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை, உணவு விடுதி  உரிமையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்பினர்  கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து  பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முதன்மை  திட்டம் தயாரித்து அரசுக்கு அளிக்கப்படும்.

போபாலில் உள்ள  திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியின் திட்ட இயக்குநர் ரமா பாண்டே  தமிழகத்தை 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த முதன்மை திட்டம் தயாரிக்கும்  பணியை தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும், பல்வேறு தரப்பு மக்களின்  கருத்துக்களை கேட்டு 9 மாதத்திற்குள் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு  அரசுக்கு வழங்கப்படும் என்றார்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கோவை  மற்றும் நீலகிரி மண்டலத்திற்கான முதன்மை திட்டம் தயாரிக்கும் பணியை  போபாலில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியும், மதுரை  மண்டலத்திற்கான முதன்மை திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியும்  தயாரிக்கவுள்ளதாக தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல்  இயக்குநகரத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சுப்ரமணி கூறினார். இந்த  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன  அலுவலர் கௌதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: