காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன்; உயிருள்ள வரை காங். கட்சியில் இருப்பேன்: ரூபி மனோகரன் பேட்டி

நெல்லை: காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி பலமாக செல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற போய் நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தான் என் தெய்வம் எனது குடும்பம். காங்கிரஸ் கட்சிக்காக எனது வாழ்க்கையை ஒப்படைத்து விட்டேன். இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன்.

ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காங்கிரஸில் இனி தவறு நடக்காது ; பழைய சம்பவங்களை மறக்க வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.

Related Stories: