மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகி தற்கொலை முயற்சி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர், லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்பட 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருன்றனர். தாளாளராக சிந்தை ஜெயராமன் என்பவரும், நிர்வாகியாக அவரது மகன் வினோத் என்பவரும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, கவுன்சிலிங் என்ற பெயரில் பள்ளி மாணவிகளை வினோத் தனியறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அனைவரும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து பள்ளி நிர்வாகி வினோத்தை தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகி வினோத் நேற்று காலை பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எங்களது பள்ளியில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.

எங்களின் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் நல்லவர்கள். யாருடைய பேச்சையோ கேட்டு, என்மீது பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் என்று பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கும்போது, நான் உயிருடன் இருப்பேனா என தெரியவில்லை. என்மீது பொறாமை காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதில் இருந்து விடுபட வழிதெரியாமல் தவித்து வருகிறேன்’ என பேசியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பள்ளியின் நிர்வாகி வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோவா சென்றுள்ளனர்.

வாக்குமூலம்

இந்த வழக்கில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெ.பவித்ரா முன்னிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் நேற்று பெற்றோருடன் வந்து வாக்குமூலம் அளித்தனர். அப்போது, மாணவிகளின் பெற்றோரும் உடனிருந்தனர்.  ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக அழைத்து வீடியோ காட்சிகள் மூலம் பதிவு செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.

Related Stories: