கேரளாவில் போதை பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேர் குத்திகொலை: 2 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேரை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம்,  தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷமீர் (40).  இவரது மகன் ஷெபில். கடந்த சில  தினங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் விற்க  முயன்றபோது அதை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,  ஷெபிலை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த ஷெபில் தலச்சேரி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு  சென்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல், அங்கிருந்த ஷெபிலின் தந்தை ஷமீர்  மற்றும் அவரது உறவினர் காலித் (52) ஆகியோரிடம் சமரசம் பேச வேண்டும் என்று  கூறியுள்ளனர்.

அப்போது திடீரென அந்தக் கும்பல் ஷமீரையும், காலித்தையும்   சரமாரியாக கத்தியால் குத்தினர். அதை தடுக்க முயன்ற ஷானிப் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.  பலத்த காயமடைந்த 3 பேரும் தலச்சேரி மற்றும் கோழிக்கோடு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  காலித்  மற்றும் ஷமீர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷானிபுக்கு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கண்ணூர் போலீஸ் கமிஷனர்  அஜித்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை  நடத்தினர். இந்த இரட்டைக் கொலை குறித்து தலச்சேரி போலீசார் வழக்கு பதிவு  செய்தனர். இது தொடர்பாக போதைப்பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: