நடராஜர் கோயில் தெற்கு கோபுர வாசல் பூட்டை உடைத்த வாலிபர்: சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயதலமாக விளங்கும் இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோயிலின் தெற்கு கோபுர வாயில் உள்பிரகார பகுதியில் உள்ள கேட் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் திடீரென அவர் வைத்திருந்த இரும்பு கம்பியால் பெரிய கேட்டின் இரண்டு பூட்டுகளையும் உடைத்துள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த பக்தர்கள், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் அந்த வாலிபரை தடுக்க முயன்றனர். அப்போது, கம்பியை காட்டி அங்கிருந்தவர்களை அந்த வாலிபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் சிதம்பரம் கனகசபை நகர் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த் (29) என தெரியவந்தது. அந்த வாலிபர் எதற்காக தெற்கு கோபுர உள் பிரகார வாயில் பகுதியில் அடைத்திருந்த பூட்டை உடைத்தார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: