தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும்: ஒன்றிய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ‘தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும். அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும். அப்போதுதான் ஆணையத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். வெறும் ‘ஆமாம் சாமி’ போடுபவர்களை நியமித்தால், ஆணையத்தின் கட்டமைப்பே சீர்குலைந்து விடும்’ என ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் சரமாரியாக விளாசியது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி கே. எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில்  நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தேர்தல் ஆணையம் பலவீனமாக இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டிஎன். சேஷன் போன்ற பலமான நபர்கள் பதவிக்கு வரும் வகையில் தேர்தல் ஆணையத்தை வலுவுடன் மாற்ற நீதிமன்றம் விரும்புகிறது,’ என கூறினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால், ‘1991ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சேவை மற்றும் சம்பள சட்டமானது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. தேர்தல் ஆணைய நியமனங்களில் விதிமுறை மீறல் இருக்கிறது என்றால் நிச்சயமாக நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால், யாரை நியமிப்பது என்பதில் ஒன்றிய அரசிடம் உள்ள அதிகாரங்கள் மிகவும் முக்கியமானது,’ என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஒன்றியத்தில் ஆளும் ஒவ்வொரு கட்சியும் தன்னைத்தானே அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது. 1991ம் ஆண்டு சட்டமானது, தேர்தல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் சேவை விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்கிறது. இதை சட்டத்தின் பெயரை பார்த்தாலே தெரியும். ஆனால், இதைத் தாண்டி ஓர் அமைப்பின் சுதந்திரத்தை உறுதி செய்ய பல விஷயங்கள் உள்ளன. அரசாங்கமானது தனக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவர்களையே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் சட்டம் அவருக்கு சம்பளம், பதவிக்காலம் என அனைத்து விஷயத்திலும் விலக்குகளை வழங்கிறது. அந்த சமயத்தில் ஆணையத்தின் சுதந்திரம் எப்படி உறுதி செய்யப்படும்?

எனவே, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலிஜியம் போன்ற ஒரு அமைப்பு வேண்டும். அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இங்கி-பிங்கி போட்டு தேர்வு செய்தீர்களா?

தேர்தல் ஆணையர் அருண் கோயல் சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாள், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘அருண் கோயலை எவ்வாறு தேர்தல் ஆணையராக நியமனம் செய்தீர்கள்? இங்கி-பிங்கி போட்டு நியமித்தீர்களா? அவரது நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டனர். ஒன்றிய அரசு சார்பில் இதற்கு ஆட்சேபனை தெரிவித்த போது, ‘தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்து கொள்ளவே, அந்த ஆவணங்களை கேட்கிறோம்’ என ஒன்றிய அரசின் தலைமை வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: