எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு இலங்கையில் முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பில்லை: அதிபர் ரணில் உறுதி

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகியதையடுத்து, ரணில் கடந்த ஜூலை மாதம் அதிபராக பொறுப்பேற்றார். அப்போது முதல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதே நேரம், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நிதி அமைச்சராகவும் உள்ள ரணில் பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தினார். முன்னதாக, கட்சி விரோத செயல்களுக்காக விமானப் போக்குவரத்து, விவசாயத்துறை அமைச்சர்கள் உள்பட 5 அமைச்சர்கள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அதிபர் ரணில், `பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காணும் வரையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டியே நடத்தவும் வாய்ப்பில்லை,’ என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதன் மூலம், ஆட்சி காலம் முடியும் வரை நவம்பர் 2024ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் ரணில் தொடருவார்.

Related Stories: