செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு மின்கம்பி அறுந்ததால் திருமால்பூர் ரயில் நிறுத்தம்: விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவித்ததால் பயணிகள் மறியல்

சென்னை: காஞ்சிபுரம்-திருமால்பூர் இடையே மின்கம்பி அறுந்து விழுந்ததால் திருமால்பூர் ரயில் நிறுத்தப்பட்டது. அதற்கு பதில், விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறித்ததால் ரயில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திருமால்பூரில் இருந்து மின்சார ரயில் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டது. இதனிடையே, இடி, மின்னல், பலத்த காற்று வீசியதால் காஞ்சிபுரம்-திருமால்பூர் இடையே மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் திருமால்பூர் மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

திருமால்பூரில் இருந்து மின்சார ரயில் வராததால், செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து 8.10 மணிக்கு சாதாரண மின்சார ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டு இங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாதாரண ரயிலாகவே இயக்கவேண்டும் என கூறி திடீரென பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சாதாரண ரயிலாக இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

அதன்படி சாதாரண ரயிலாக இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேற்று மதியம் மின்சார ரயில் புறப்பட்டது. தாம்பரம்- சானட்டோரியம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலின் மேல் தளத்தில் உள்ள (பாண்டோகிராஃப்)  கருவி பலத்த சத்தத்துடன் உடைந்து வெடித்தது. இதில், ரயில் பாதியிலேயே நின்றது. இந்த சத்தம் கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் சேவை  சீரானது.

Related Stories: