ரூ.2 கோடி செலவில் புனித தோமையார் தேவாலயம் சீரமைக்கும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

ஆலந்தூர்: சென்னை பட்ரோட்டில் உள்ள புனித தோமையார் தேவாலயம் கடந்த 1523ம் ஆண்டு கட்டப்பட்டு இப்பொழுதும், பொலிவுடன் காணப்படுகிறது. இதன் 500வது ஆண்டு விழாவையொட்டி நடந்து வரும் சீரமைப்பு பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தேவாலய பங்குதந்தை மைக்கேல் உடனிருந்தார். இந்த, தேவாலயத்தில் உள்ள நினைவு சின்னங்கள், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டியல்கள் போன்றவற்றை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு பணிக்காக நிதியை ஒதுக்கி வருகிறார். இதில், 1523ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தோமையார் தேசிய திருத்தலத்தினை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது. இதேபோல், நாகூர் தர்காவிற்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. அங்கும் விரைவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: