களக்காடு அருகே பராமரிப்பின்றி புதர் மண்டி காடாக மாறிய பச்சையாறு: ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்

களக்காடு: களக்காடு அருகே பச்சையாறு புதர் மண்டி காடாக மாறியுள்ளதால், ஆற்றில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் பச்சையாறு தேங்காய் உருளி அருவி, மஞ்சுவிளை, கீழபத்தை, வடகரை, பத்மநேரி, தேவநல்லூர், சிங்கிகுளம் வழியாக ஓடி தருவையில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. பச்சையாறு மூலம் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறுகின்றன.

இந்நிலையில் மேலவடகரை பகுதியில் பச்சையாறு தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்பு இல்லாததால் ஆற்றில் செடி,கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. மண் மேடுகளும் உருவாகியுள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செடி, கொடிகளே காட்சி அளிக்கின்றன. ஆறு காடு போல மாறியுள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வதிலும் தடை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழலும் நிலவி வருகிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துள்ள பக்தர்கள் அதிகாலையிலேயே ஆற்றில் நீராட வருகின்றனர். அவ்வாறு வரும் போது ஆற்றில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ள பாம்புகள் மிரட்டுவதால் ஐயப்ப பக்தர்கள் அச்சமடைகின்றனர்.

இந்த பாம்புகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்களும் பீதியில் உள்ளனர். அத்துடன் மேலவடகரை பச்சையாற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் எடுக்கப்பட்டு, களக்காடு நகராட்சி பகுதியிலுள்ள 27 வார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த உறைகிணறுகளை சுற்றிலும், செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே மேலவடகரையில் பச்சையாற்றை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி நெல்லை மாவட்ட பா.ஜ. விவசாய அணி தலைவர் சேர்மன் துரை கூறுகையில், ஆற்றில் ஏற்பட்டுள்ள புதர்களால் அடைப்பு ஏற்பட்டு, உறைகிணறுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீர் மாசடைந்து கழிவுகள் போல் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. உறைகிணறுகள் அருகில் கூட செல்ல முடியாதவாறு செடி-கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே ஆற்றில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று களக்காடு நகராட்சி நிர்வாகத்திடமும், நீர்வளத்துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளோம். பருவமழை சீசன் என்பதால் ஆற்றை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: