மத்திய பிரதேச வனப்பகுதியில் புலிகள் மீது கற்கள் வீசுவதாக நடிகை புகார்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

போபால்: வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சிலர் கற்களை வீசுவதாக நடிகை  ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ, மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சினிமா பட ஷூட்டிங்கிற்காக கடந்த வாரம் போபால் சென்றடைந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சுற்றுலா பயணிகள் கல் எறிந்து தாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘சில சுற்றுலா பயணிகள் விலங்குகளிடம் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். இதனால் புலிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் வனப்பகுதியில் உலா வரும் விலங்குகளின் மீது கல் எறிவது போன்று உள்ளது.

நடிகையின் வீடியோ பதிவு வெளியானதை தொடர்ந்து வான் விஹார் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பதிவில், ‘இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட விலங்குகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புலியை துன்புறுத்திய விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 வயது குழந்தையை கொன்ற சிறுத்தை: உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டம் நிசானி கிராமத்தில் பியூஷ் (5) என்ற குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தை, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தாக்கிக் கொன்றது. அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து நைப் பகுதி தாசில்தார் ஹரேந்திர காத்ரி கூறுகையில், ‘சிறுத்தை தாக்கி இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. வனத்துறைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.

Related Stories: