ஊத்தங்கரை பண்ணையில் பயங்கர தீ: 3700 கோழி குஞ்சுகள் கருகி சாவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3700 கோழிக்குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி வேடப்பட்டியை சேர்ந்தவர் மாது (45). அதே பகுதியில் கடந்த 2 வருடமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த மாது மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில், பண்ணையில் இருந்த 3700 கோழி குஞ்சுகள் கருகி உயிரிழந்தது. மின்கசிவால் இந்த தீ விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: