குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ரூ.15 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

நாகப்பட்டினம் : வங்கக்கடலில் ஏற்பட்ட குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லாததால் ரூ.15 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.

மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆழ்கடல் சென்ற மீனவர்களை திரும்பி வரவும் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் கடந்த 8ம் தேதி முதல் ஆழ்கடல் செல்லாமல் படகுகளை கரைகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்தனர்.

கடந்த 8ம் தேதி முதல் தொடர்ந்து வானிலையில் மோசமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டது. மீன்வளத்துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று (22ம் தேதி) வரை 15 நாட்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி சார்ந்த பிற தொழிலாளர்களும் என 50 ஆயிரம் பேர் வேலையிழந்தனர்.

நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு அடைந்து. இதுபோன்ற இயற்கை சீற்ற காலங்களில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மீனவர்களும் அதை சார்ந்த பிற மீன்பிடி தொழிலாளர்களும் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: