அரக்கோணத்தில் இருந்து ரயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-6 பெண்கள் கைது

அரக்கோணம் : அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 6 பெண்களை கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்நிலையம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், வேளாங்கண்ணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் ரயில்களில் சோதனையிட்டனர். அப்போது, 5வது பிளாட்பாரத்தில் மூட்டைகளுடன் சென்ற 6 பெண்களை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த இந்திராணி(68), கீதா(48), பூங்கொடி(48), மஞ்சுளா(48), சொப்பனா(30), செந்தாமரை(60) என்பது தெரியவந்தது.

மேலும், அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ஆந்திராவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 பெண்களையும் கைது செய்து, 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: