ரோஜ்கார் மேளா திட்டத்தில் 210 பேருக்கு பணி ஆணை: அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்

சென்னை: பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதில், இரண்டாம் கட்டமாக ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு புதிதாக தேர்வாகியுள்ள 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

 அதனை தொடர்ந்து, அவர்களுக்கு வகுப்புகள் மூலம் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 210 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சி.ஆர்.பி.எப் டிஜிபி தினகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, தேர்வான பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மத்திய அரசின் ரயில்வே துறை, வங்கித்துறை, தபால்துறை, மத்திய அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் பணியாற்றுவதற்கான ஆணைகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பணிநியமன ஆணைகளும் இதில் வழங்கப்பட்டன. பின்னர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் பேசுகையில், ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கியுள்ளனர். ஒன்றிய அரசின் 14 துறைகளில் மட்டும் 210 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக ‘ஸ்டார்ட் - அப்’ நிறுவனங்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இது பெருமை பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் கலாச்சார பண்பாடான உறவு காலம் தொட்டு உள்ளது. அவை மேலும் வலுப்பெரும் விதமாக பிரதமரின் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி இருக்கும். ஒன்றிய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக பணியாளர்கள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, இன்று பணி அமர்த்தபட்ட அனைவரும் தமிழர்கள். சென்னையில் மட்டும் சுமார் 210 பேருக்கும், அதேபோல் தென்காசியில் சுமார் 200 பேர் என தோராயமாக இருப்பர். தமிழ்நாட்டில் மொத்தம் ஆயிரம் பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன் என மழுப்பலாகவும், குழப்பத்துடனும் பதிலளித்தார்.

இதை கேட்ட நிருபர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் இது, கூட தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சராக உள்ளரே என சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் சி.ஆர் பி.எப் அதிகாரிகள் டி.ஐ.ஜி எம்.தினகரன், டி. ஐ. ஜி மருத்துவம் ஜெயபாலன், டி.ஐ.ஜி அருள்குமார், டி.சி.அஜாரா, 97 பெட்டாலியன் கமெண்டர் கமெண்ட் அண்ட் கமலேஷ் குமார், சி.ஆர்.பி.எப்.அதிகாரிகள் மற்றும் பா.ஜ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: