பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.14 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டு 2 லட்சம்  வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,14,073 வீடுகள்  கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அமுதா ஆகியோர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நேற்று சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு ஊதிய செலவினமாக ரூ.4783.48 கோடியும், பொருட்கூறு மற்றும் நிர்வாக செலவினமாக ரூ.2360.44 கோடியுமாக மொத்தம் ரூ.7143.92 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 2.77 லட்சம் பணிகள் எடுக்கப்பட்டு அதில் 1.08 லட்சம் பணிகளும் 2.72 லட்சம் நிலுவை பணிகளுமாக சேர்த்து மொத்தம் 3.80 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து குக்கிராமங்களும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு,  2022-2023ம்ஆண்டு, 388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,544 ஊராட்சிகளில் ரூ.1,155 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு 2,00,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,14,073 வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: