பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஐ.நா பொதுச்செயலாளர் கவலை

நியூயார்க்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாக மாறி வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதியன்று ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஒவ்வொரு 11 நிமிடங்களுக்குள்ளும், ஒரு பெண் அல்லது சிறுமி அவரது வாழ்க்கைத் துணையால் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.  

உலகளவில், 15 முதல் 49 வயதுடைய 10 பெண்கள் மற்றும் சிறுமிகளில் ஒருவருக்கு  அவர்களின் உறவுகள் அல்லது வெளிநபர்களால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு  ஆளாகி வருகின்றனர் என்று அறிக்கை காட்டுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையானது, உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாக மாறி வருகிறது. வரும் 2026ம் ஆண்டுக்குள் பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கான நிதியை 50 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.

பெண்களும், சிறுமிகளும் வெறுக்கத்தக்க வார்த்தைகள், பாலியல் துன்புறுத்தல், ஆபாச புகைப்படங்கள் போன்ற பல வகைகளில் ஆன்லைன் வன்முறையை எதிர்கொள்கின்றனர். பாலின பாகுபாடு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் உலகின் பாதிபேர் பெரும் விலையை கொடுக்கிறார்கள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பு உள்ளது. அப்படியிருந்தும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன.

Related Stories: