ஆந்திராவில் அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப கோரி தெலுங்கு தேசம் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்-சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர் : ஆந்திராவில் அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப கோரி சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் தெலுங்கு தேசம் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சித்தூர்  கலெக்டர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி தலைவர் காஜூர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் வருடத்திற்கு இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதலமைச்சர் ஆகி நான்கு வருடங்கள் நெருங்க உள்ள நிலையில் இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. அவர் முதலமைச்சர் ஆனவுடன் இதுவரை 50ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளார். இதனால் படித்து வேலையில்லா இளைஞர்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஜெகன் மோகன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளுக்கு கார்ப்பரேஷன் நிதியை பயன்படுத்தி வருகிறார். இதனால் படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல் அவர் முதலமைச்சராகி மூன்று வருடத்தில் இதுவரை மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட ஏற்படுத்தவில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏராளமான படித்து வேலையில்லா இளைஞர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சென்று கூலி வேலை செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆந்திர மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் சித்தூர் மாவட்டத்தில் சிட்டியில் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார். தற்போது சிட்டியில் இருசக்கர வாகன தொழிற்சாலை, கார் தொழிற்சாலை, மொபைல் போன் தொழிற்சாலை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பணிபுரிந்து பயனடைந்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்று நான்கு வருடங்கள் நெருங்க உள்ள நிலையில் இதுவரை ஆந்திர மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட அவருடைய ஆட்சியில் நிறுவவில்லை இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அதேபோல் ஆந்திர மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பல்லாயிரம் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. அவை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் காவல்துறையில் 50 ஆயிரம் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அவை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் அரசு பல்வேறு துறைகளில் பல லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஆகவே மாநில முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

கார்ப்பரேஷன் நிதியை மற்ற நல திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் இல்லையென்றால் தெலுங்கு தேச கட்சி இளைஞர் அணி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தெலுங்கு தேச கட்சி இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் உடனடியாக மாநில முதல்வர் ஜாப் கேலண்டரை ஜனவரி மாதத்தில் விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தெலுங்கு தேச இளைஞரணி நகரத் தலைவர் வருண் உள்பட ஏராளமான இளைஞரணி பொருளாளர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: