மக்கள்குறைதீர் கூட்டத்தில் 23 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா-தஞ்சாவூர் கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள்குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெற்றார். பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும் வழங்கினார்.

கூட்டத்தில் வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அடிப்படை வசதி தேவை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பேரூராட்சி, மௌலானா தோப்பு பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கன் பழங்குடி சமூகத்தினர், மதுக்கூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கோமதி தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் பேரூராட்சி, 10வது வார்டில் உள்ள மௌலானாத் தோப்பில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினருக்கான உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியினருக்கு மட்டும் கழிப்பறை வசதி, மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி என அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் காட்டுநாயக்கர் பழங்குடியின சமுதாய மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மயான பாதைக்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும்” என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

சாதிச் சான்றிதழ்

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சிஐடியூ நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில், பெற்றோர்கள் சிலருக்கு இந்து ஆதியன் என சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களில் பலருக்கு இந்து ஆதியன் என சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு செல்லவும், அரசின் சலுகைகளை பெறவும், சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே, மாவட்ட கலெக்டர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வழங்கி இருப்பது போல், எங்கள் பகுதிகளிலும் ஆய்வு செய்து, வருவாய் கோட்டாட்சியர் மூலம் இந்து ஆதியன் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், விரைவில் ஆய்வு நடத்தி, ஒரு மாத காலத்திற்குள் ஆர்டிஓ மூலம் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்\” என தெரிவித்தார். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Related Stories: