சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குநர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்-25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

விழுப்புரம் :  தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையில், சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்து வருகின்றன.

இதனிடையே, நேற்று இவ்வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வராதது குறித்து தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து அரசு தரப்பு சாட்சியான, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரிடம், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் வழக்கு சம்பவத்தின் போது சீமா அகர்வால், தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வந்துள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அப்போதைய தலைமையிடத்து கூடுதல் டிஜிபியான சீமா அகர்வாலிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்றைய தினம் சாட்சியம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம், அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் டிஜிபி திரிபாதி ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: