கோபி பகுதிகளில் கைவரிசை காட்டிய 4 பேர் கைது ‘பார்ட் டைம் ஜாப்’ ஆக கொள்ளையடித்த வாலிபர்கள்

கோபி :  கோபி கடைவீதியை சேர்ந்தவர் சிவாஜி மகன் கானாஜி (45). இவர் கடை வீதியில் நகைக்கடை வைத்து உள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கோபிக்கு சென்றபோது கவுந்தப்பாடி அருகே உள்ள எல்லீஸ்பேட்டை என்ற இடத்தில் காரில் வந்த 2 நபர்கள் வழிமறித்து போலீஸ் என கூறி அவரிடம் பைக் சாவியை பிடுங்கிக் கொண்டனர். தொடர்ந்து கானாஜி பையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

கவுந்தப்பாடி சத்தி ரோட்டை சேர்ந்தவர் சையது முகமது புகாரி (41). இவர் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி சையது முகமது புகாரி வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அய்யம்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கானாஜியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், கவுந்தப்பாடியில் மளிகைக்கடையில் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கோபி புதுப்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஜெகன் (23), கோபி மேட்டுவலுவு கமலா ரைஸ்மில் வீதியை சேர்ந்த நந்தகுமார் (25) ஆகிய அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெகன் பனியன் கம்பெனியிலும், நந்தகுமார் கட்டிட வேலையும் செய்து வந்தனர். வேலை நேரம் போக ஓய்வு நேரங்களில் ‘பார்ட் டைம் ஜாப்’ போல கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் மலர் நகரை சேர்ந்தவர் டேவிட் சூசை மாணிக்கம் (64). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி இசபெல்லா ஜான்சிராணி. கொளப்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே மாதம் 5ம் தேதி தனது மனைவி இசபெல்லா ஜான்சிராணியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 2 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 58 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து டேவிட் சூசை மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோபி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த டி.என்.பாளையம் ராஜம்மாள் வீதியை சேர்ந்த பாசில் (23) என்பவரை எஸ்ஐ ஜெயரத் தலைமையிலான தனிப்படை போலீஸ்காரர்கள் ஜவஹர், ஜெகதீஸ்வரன், தர்மன் ஆகியோர் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும், இவர் கடந்த சில மாதங்களாக கோபி பவளமலை சாலையில் கருப்பராயன் கோயில் வீதியில் தங்கி, தனியார் நிதி நிறுவனம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கொடுத்த கடனை வசூல் செய்து வரும் வேலையை செய்து வந்ததும், கடனை வசூல் செய்ய சென்றபோது, வீடு பூட்டியிருப்பதை பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பாசிலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

கோபி தாராபுரம் சாலையில் தவிடம்பாளையம் பிரிவில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பீடி சிகரெட், டூத் பேஸ்ட் உள்ளிட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கெட்டிசெவியூர் அருகே உள்ள சின்னாரி பாளையத்தில் குன்னமரத்தையன் அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

 கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (43). இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சுந்தரமூர்த்தி கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது உரக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60 ரூபாய் பணம், வங்கி காசோலை, பாஸ்புக் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுவலூர் போலீசார் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த பொலவக்காளி பாளையம் இந்திரா நகரை  சேர்ந்த கந்தன் என்கிற கிருபாகரனை (21) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில் உண்டியலை உடைத்து  கொள்ளையடித்ததும், தவிடம்பாளையத்தில் மளிகைக்கடையில் கொள்ளையடித்ததும், கரட்டடிபாளையத்தில் உரக்கடையில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories: