15 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்தும் அம்பத்தூரில் தொடங்கப்படாமல் முடங்கிப்போன சுரங்கப்பாதை பணி: ரயில்வே கேட்டில் தவிக்கும் மக்கள்

அம்பத்தூர்: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை அதற்கான பணி தொடங்கப் படவில்லை. இதனால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது அம்பத்தூர் ரயில் நிலையம். இதை சுற்றியுள்ள ஆசிரியர் காலனி, வரதராஜபுரம், காமராஜபுரம், ராமாபுரம், மங்களபுரம் மற்றும் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்பவர்கள் அம்பத்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே கேட்டை (கடவுப் பாதை) பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரயில்வே கேட்டை கடந்து செல்ல நீண்டநேரம் காத்திருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்பதுதான் அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அம்பத்தூர் ரயில் நிலையம் வழியாக நாளொன்றுக்கு புறநகர், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் என நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல சுமார் 2 கிலோ  மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, இந்த ரயில்வே கேட்டை கடக்க ரயில்வே இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. அப்படி இந்த இரும்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்தாலும் பாலத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் மேம்பாலத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

மேலும், இந்த ரயில்வே கேட்டை கடக்கும்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் ரயில்வே கேட்டை பாதுகாப்பாற்ற சூழலில் கடந்து செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பயன்படும் வகையில் சுரங்கப்பாதை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று ரயில் நிலையத்தை சுற்றி வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதவிர அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி ஆகிய பகுதியிலிருந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி மிகச் சிரமத்துடன் ரயில்வே கேட்டை கடந்து, அங்கிருந்து சென்னை புறநகர் பகுதிகளான அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர் போன்ற பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில்வே கேட்டை கடந்தபோது இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: