செஞ்சிலுவை சங்க நிதியில் முறைகேடு தமிழக நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் தலைவராக ஹரிஷ் எல்.மேத்தா, பொருளாளர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ரூதீன் இருந்த காலக்கட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்திற்கு வந்த நிதியை சட்டவிரோதமாக தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி, அச்சங்கத்தின் நிர்வாகி ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020-ம் ஆண்டு பொதுநல  வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம், நிதி முறைகேட்டில் பல மர்மங்கள் நீடிப்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினர். அதில், தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, பொருளாளர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ரூதீன் ஆகியோர் பணிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பல கோடி நிதியை பெற்று சட்டவிரோதமாக மோசடி செய்தது உறுதியானது. பின்னர் சிபிஐ 3 நிர்வாகிகள் மீதும், 2020-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி ஐபிசி 120(பி), ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணையில் பல கோடி ரூபாய் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ரூதீன் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்தின் வந்த நிதியை முறைகேடாக பயன்படுத்தி, அதிகளவில் சொத்துக்களை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: