2வது திருமணம் செய்து கொண்டதால் தம்பதிக்கு செருப்பு மாலை; சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்: ராஜஸ்தான் சமுதாய பஞ்சாயத்தில் தீர்ப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கும், அவரது மனைவிக்கும் செருப்பு மாலை அணிவித்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரின் மதோராஜ்புரா பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணமான தம்பதிக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர்களுக்கு பாட்டிலில் நிரப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வீடியோ வைரலானதால், இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தற்போது வைரலாகி வரும் வீடியோ தொடர்பான சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடந்தது. சம்பந்தப்பட்ட இளைஞருக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், அவர் அவரது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த இளைஞர், பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து முதல் மனைவியின் சகோதரருக்கு தெரியவந்தது. அதனால் அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஊர் சமுதாய பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞனையும், புதியதாக திருமணமான பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், சமுதாய பஞ்சாயத்து நிர்வாகிகள் அளித்த தீர்ப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இருவருக்கும் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை குடிக்க கொடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக தற்போது 5 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: