ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் ஒரே நாளில் எடப்பாடி அணிக்கு மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: அதிமுக ஓபிஎஸ் அணியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒரே நாளில் எடப்பாடிஅணிக்கு மாறியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைந்ததும் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்தார். இதனால் அவரது ஆதரவாளரான எஸ்.பி.சண்முகநாதனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டம் வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் இணைக்கப்பட்டு அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜூ வடக்கு மாவட்டச் செயலாளராகவும், தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகள் இணைக்கப்பட்டு முன்னாள் அமைச்சரும், அப்போதைய ஸ்ரீவை. தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முகநாதன் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

செல்லப்பாண்டியனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட போதும், அதிகாரம் இல்லாத நிலையில் அதிருப்தியில் இருந்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தை 3 ஆக பிரித்து 3 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை செல்லப்பாண்டியன் வலியுறுத்தி வந்தார். இதனிடையே ஒற்றைத் தலைமை பிரச்னையில் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அதிமுக இபிஎஸ் அணிக்கு நிகராக தமிழகம் முழுவதும் ஓபிஎஸ்சும் நிர்வாகிகளை நியமித்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் ராஜூவும், சண்முகநாதனும் இபிஎஸ் அணிக்கு சென்று வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்களாக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை, ஓபிஎஸ் அழைத்துப் பேசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தொகுதிகளை சேர்த்து (தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்) தெற்கு மாவட்டச் செயலாளராக செல்லப்பாண்டியனையும், கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்திற்கு வினோபாஜியையும் மாவட்ட செயலாளராக நியமித்தார்.

இதுகுறித்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, செல்லப்பாண்டியனிடம் எடப்பாடியின் தூதுவராக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்னை சென்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு செல்லப்பாண்டியன் பூச்செண்டு கொடுத்து, அவரது அணியில் இணைந்தார். அப்போது தலா 2 சட்டமன்ற தொகுதிகள் வீதம் தூத்துக்குடி மாவட்டத்தை 3 ஆக பிரிப்பதாகவும், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு செல்லப்பாண்டியனை விரைவில் மாவட்டச் செயலாளராக நியமிப்பதாகவும், 2024 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில்  செல்லப்பாண்டியனுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகரை மையமாக வைத்து எஸ்.பி.சண்முகநாதன் அரசியல் நடத்தி வருவதால் அவ்வளவு எளிதாக செல்லப்பாண்டியனுக்கு விட்டுக் கொடுத்து விடுவாரா? என்ற சந்தேகத்தை அவரது கட்சியினர் எழுப்பி வருகின்றனர். எடப்பாடியின் வாக்குறுதி, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ஓபிஎஸ் தடாலடி

செல்லப்பாண்டியன் ஒரே நாளில் முகாம் மாறிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை 3 மாவட்டங்களாகப்  பிரித்து தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மாநகர் மாவட்டத்திற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஏசாதுரையையும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு வக்கீல் புவனேஸ்வரனையும், கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்திற்கு வினோபாஜியையும் மாவட்ட செயலாளராக ஓபிஎஸ் நியமித்துள்ளார்.

Related Stories: