50 ஆயிரம் விவசாயிகளுக்கு 100 நாட்களுக்குள் இலவச மின் இணைப்பு: அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

சென்னை: தமிழத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் படி, 100 நாட்களுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும், வரும் கனமழைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி விழாவில் அறிவித்தபடி, முதல் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு 50,000 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கனமழை பெய்து முடித்த நிலையில், பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம் என அறிவுறுத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘கன மழையை எதிர்கொள்ள கூடிய வகையிலும், மழை பெய்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்குவதற்காக ஆய்வு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. குறிப்பாக, வரக்கூடிய நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் கூட எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது’’ என்றார். தற்போது 1,77,000 மின்கம்பங்கள் இருப்பில் இருக்கிறது. 1,37,000 மின் கம்பங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி முடிக்கப்பட்டு மின்கம்பங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இவை தவிர 14,820 மின்மாற்றிகள் மற்றும் 12,800 கி.மீ. மின்கம்பிகள் கையிருப்பில் உள்ளன.

Related Stories: