அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீடு அற்பமானது: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு

புதுடெல்லி: ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு அற்பமானது’ என்று, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி 2வது முறையாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்துவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தலை நடத்தவும் தடை விதித்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு அற்பமானது. அதிமுக.வை பொருத்தமட்டில் கட்சியின் பொதுக்குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது. அதன் முடிவுதான் இறுதியானது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சூறையாடி, பல பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அவர் அதிமுக.வுக்கு எதிராக செயல்படுகிறார்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories: