பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி-சேலை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச வேட்டி - சேலை வழங்குவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான உற்பத்தி நிறைவடைந்ததும்  வேட்டி-சேலை வழங்கும் திட்டம் துவங்குவதற்கான வேலைகள் தொடங்கப்படும். அதன்படி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வேட்டி - சேலை உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் இதன்மூலம் தொடர் வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.487.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த  நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும்  துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய்  நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நிதித்துறை செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் டி.பி.யாதவ், காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ‘பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி - சேலை பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நியாய விலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். குறிப்பாக 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, ஜனவரி 10ம் தேதிக்குள் இலவச வேட்டி - சேலை வழங்கும் பணியை முடிக்க வேண்டும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

* 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைன்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக இந்த ஆண்டு புதிய வடிவமைப்பில் நல்ல  தரத்துடன் வேட்டி - சேலை தயாரிக்கப்பட்டுள்ளது. சேலைகள் 15  டிசைன்களிலும், பல நிறங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம்  பெண்களை கவரும். வேட்டியும் 5 டிசைன்களில் தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: