அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள ஊழலில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்பு என சந்தேகம்?

* டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு துணைவேந்தர், பதிவாளர், 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன்

* பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016ம் ஆண்டு நடந்துள்ள ஊழலில், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்பு உள்ளது என சந்தேகிக்கி்றோம் என்று பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார். 2016ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான முறைகேடு குறித்து, சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழு இணைச் செயலாளர் தேன்மொழி,  உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாதவரம் எஸ்.சுதர்சனம், ஓய்.பிரகாஷ், சிந்தனை செல்வன், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பொது கணக்கு குழுவை சேர்ந்தவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: 2016ம் ஆண்டு நடந்த ஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுக்கு வந்திருக்கிறோம். இந்த ஆய்வில் துணைவேந்தர், பதிவாளர், கண்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷன் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தோம். 2016ம் ஆண்டு மதிப்பெண் தாள்களை நவீனமயமாக்குதல் என்று ரூ.77 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உமா என்ற கண்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷனர், மர்மமான முறையில் இறந்துள்ளார் என கூறப்படுகிறது. ஒரு பிரிவு இயற்கையான மரணம் என்றும், மற்றொரு பிரிவு இயற்கை சாரா மரணம் என்றும் தெரிவித்துள்ளனர். சீதாலட்சுமி என்ற மற்றொரு கமிட்டி உறுப்பினரும் இறந்துள்ளார்.

ஆய்வு நடத்தியதில் பொதுக்குழு உறுப்பினர்களாக நாங்கள் புரிந்து கொண்டது. இந்த ரூ.77 கோடி ஊழலை தனிநபராக செய்திருக்க முடியாது. இந்த அதிகாரம் அவருக்கு கிடையாது. ரூ.10 லட்சத்துக்கு மேல் டெண்டர் விட வேண்டும் என்றால் ஓபன் டெண்டருக்கு செல்ல வேண்டும். ஆனால் இவர்களுக்கு வேண்டிய நிறுவனங்களை அழைத்து டெண்டர்களை கொடுத்துள்ளனர். ஊழல் என்று வந்த பிறகு எக்ஸாமினேஷன் ஆப் கண்ட்ரோலர் தான் இந்த ஊழலுக்கு காரணம் என முடிவுக்கு வருகின்றனர். இவருக்கு பின்புலத்தில் இருக்கக் கூடியவர்களை ஏன் விசாரிக்கவில்லை. அப்போதைய உயர்கல்வி துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர் யாரையும் விசாரிக்காமல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் துணைவேந்தர், பதிவாளர், 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அனுமதி கொடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஒரு பெண்ணை மட்டும் குறி வைத்து, அவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆகவே, பொது கணக்கு குழு சட்டப்பேரவை மூலமாக டிசம்பர் 2ம் தேதி இந்த ஒப்பந்தம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர கூறி இருக்கிறோம். 2ம் தேதி மாலை 3 மணி அளவில் விசாரணை தொடங்கும். அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சம்பந்தம் உள்ளதா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக அவரின் அனுமதி இல்லாமல் இந்த ஒப்பந்தம் நடந்து இருக்காது. குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமை அழைத்து விசாரிக்கலாமா என்பதை உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம்.

2016ம் ஆண்டில் பணியாற்றிய துணை வேந்தர், பதிவாளர் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி கோரியவர்கள் அனைவரையும் விசாரித்த பிறகு மற்ற முடிவுகளை எடுப்போம். மறைந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்தவர்கள் இந்த வழக்கில் சிக்க வைத்தவர்கள் என்பது விசாரணை முடிவில் தெரியவரும். காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு செய்ததில் 2014-18ம் ஆண்டு வரை காவல்துறை சார்பாக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து விழுக்காடு வாட் வரியை கட்டுவதற்கு பதிலாக கூடுதலாக 14 விழுக்காடு, அதாவது 9 விழுக்காடு கூடுதலாக கட்டியுள்ளனர். அதையும் தணிக்கையாளர்கள் கண்டுபிடித்து கூறிய பிறகு அதை திரும்ப பெற்று விட்டோம் என்ன பதில் அளித்துள்ளனர்.

23ம் தேதி புதுக்கோட்டை, 24ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்த உள்ளோம். உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியாமல் ஒப்பந்தம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த விசாரணைக்கு பிறகு அவரை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக முடிவு எடுப்போம். இந்த கமிட்டியில் உள்ள மூன்று அதிகாரிகள் மற்றும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளோம். ஒரு அதிகாரிக்கு மட்டுமே சம்பந்தம் இருக்கும் என நினைத்தோம். ஆனால், பலருக்கும் இந்த ஊழலில்  தொடர்புள்ளது. துணை வேந்தர், பதிவாளர், மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்ட பிறகு களத்தில் இறங்கி உமா பணியாற்றியுள்ளார். எனவே அவரை தூண்டி விட்டு இந்த பணியை செய்ய சொன்னது யார் என்பதை விசாரிக்க வேண்டும்.

Related Stories: