ஜிஎஸ்டி நிலுவை, நிதியுதவிகளை வழங்காமல் தமிழக அரசை கட்டிப்போட்ட மோடி அரசு; கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக திருவண்ணாமலையில் நடந்தது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மின்சார மசோதாவால் இலவச மின்சாரம் பறிபோகும் ஆபத்து உள்ளது. மின் கட்டணத்தை தனியார் முடிவு செய்யும் ஆபத்தும் இருக்கிறது. சட்ட வரம்புகளை மீறி தமிழக ஆளுநர் செயல்படுகிறார். அவர் சார்ந்த அரசியல் குறித்து பேசுகிறார். போட்டி அரசாங்கத்தை தமிழகத்தில் நடத்துகிறார். பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்களை முன்னிறுத்தி பாஜக போட்டி ஆட்சியை நடத்துகிறது. எனவே, தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.

ஜிஎஸ்டி வரி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, நூறு நாள் வேலைத்திட்டம் சிதைக்கப்படுவது, தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனங்கள் போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைளை கண்டித்து, டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 4 மையங்களில் பெருந்திரள் மாநாடு நடத்த இருக்கிறோம். தமிழகத்துக்குவர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை வழங்காமலும், நிதியுதவிகளை முறையாக அளிக்காமலும் மாநில அரசை ஒன்றிய அரசு கட்டிப்போட்டுள்ளது. இந்தி திணிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: