ரூ.1,000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம், ஜார்கண்ட் முதல்வரிடம் 9 மணி நேரம் விசாரணை; ராஞ்சி அமலாக்கத்துறை ஆபீஸ் முன் நேற்றிரவு பரபரப்பு

ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தியது.

இந்நிலையில் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ராஞ்சியில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகம் முன் ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை அளித்தார். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ரூ.1,000 கோடி கல் மற்றும் மணல் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நேற்று காலை 11.50 மணி முதல் இரவு 9.40 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜார்கண்ட் முழுவதும் 9  கோடி மெட்ரிக் டன் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், அதில் 20% மட்டுமே சாஹிப்கஞ்சில் இருந்து வெட்டி  அனுப்பப்பட்ட கல் அளவு என்று ஹேமந்த் சோரன் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தன. இரவு வரை விசாரணை நடத்தப்பட்டதால் ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோனர் அமலாக்கத்துறை அலுவலகம் முன் கூடியிருந்தனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஹேமந்த் சோரன், தனது மனைவி கல்பனாவுடன் தனது வீட்டிற்குச் சென்றார். அப்போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேட்டியளிக்க மறுத்துவிட்டார்.

Related Stories: