திருவொற்றியூரில் நகை கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்றவர் கைது

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், மஸ்தான் கோயில் தெருவை சேர்ந்தவர் அசோக் (60). இவர், கிராம தெருவில் ஒரு வாடகை கட்டிடத்தில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து அசோக் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். நள்ளிரவில் அசோக்கின் நகைக் கடை சுவரில் துளையிடும் சத்தம் மேல்மாடியில் குடியிருந்தவர்களுக்கு கேட்டது. அவர்கள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது, நகைக் கடையின் சுவரில் ஒரு மர்ம நபர் சுத்தியலால் அடித்து துளையிடுவதை பார்த்து அலறி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்து, அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் வந்து அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, திருவொற்றியூர், மஸ்தான் கோயில் பகுதியை சேர்ந்த முருகன் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தன்னிடம் உள்ள திருப்புளி, சுத்தியலை வைத்து சுவரில் துளையிட்டு அசோக்கின் கடையில் நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது.இதையடுத்து வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய சுத்தியல், திருப்புளி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: