டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவ விவகாரம் எல்லா பிரச்னைக்கும் பெண்களை குறை கூறாதீங்க!: ஒன்றிய அமைச்சரின் பதவியை பறிக்க பெண் எம்பி கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம் தொடர்பாக எல்லா பிரச்னைக்கும் பெண்களை குறை கூற வேண்டும் என்று கூறிய ஒன்றிய அமைச்சரை எச்சரித்த சிவசேனா ெபண் எம்பி, அவரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதி கால் சென்டரில் பணியாற்றிய ஷ்ரத்தா வால்கரும், அப்தாப் அமீன் பூனாவாலா என்பவரும் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து  வந்தனர். பின்னர் இருவரும் டெல்லி வந்தனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட  மோதலால் காதலி ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் கொடூரமான முறையில் கொன்று காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பல  இடங்களில் வீசி எறிந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில்,  அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷ்ரத்தா வால்கர் கொலை சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘படித்த பெண்கள் தான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையை தேர்வு செய்கின்றனர். தங்கள் பெற்றோரை விட்டுவிட்டு செல்கின்றனர். ஷ்ரத்தா கொலைக்கு அவரே பொறுப்பு. காரணம் அவரது லிவ்-இன் உறவை அவரது பெற்ேறார்கள் எதிர்த்துள்ளனர். பொதுவாக உண்மையிலேயே யாரையாவது காதலித்தால், முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். இது என்ன லைவ்-இன் ரிலேஷன்? இதுபோன்ற முறைகள் குற்றங்களை ஊக்குவிக்கின்றன’ என்று தெரிவித்திருந்தார். இவரது பதில் பெண்களை குறைகூறும் வகையில் இருப்பதால், பலரும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறிய கருத்துகள் வெட்கமற்ற, இதயமற்ற, கொடூரமானதாக உள்ளது; எல்லா பிரச்னைகளுக்கும் பெண்ணையே குறை கூறும் மனோபாவம் ஏற்கக் கூடியது அல்ல. இவ்வாறு கருத்து கூறிய அமைச்சர் கவுஷல் கிஷோரை பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்கம் செய்ய வேண்டும். பெண்கள் சக்தி குறித்து பிரதமர் பெருமையாக பேசி வரும் நிலையில், அவரது அமைச்சர் கூறிய கருத்து எதனை காட்டுகிறது? ஆணாதிக்க மனநிலையில் இதுபோன்ற குப்பைகளை சுமந்தது போதும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: