எழும்பூர் காவல் நிலையம் அருகே கேபிள் டிவி ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை; சக ஊழியரை கைது செய்து போலீஸ் விசாரணை

சென்னை: எழும்பூரில் கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் ஊழியர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சக ஊழியரான குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் நெடுஞ்சாலையில் கேபிள் டிவி நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வியாசர்பாடியை சேர்ந்த விவேக்(30) என்பவர் வேலை செய்து வந்தார். விவேக்கிற்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். விவேக் பணியாற்றும் கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்(30) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் யார் பெரியவன் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் விவேக் மற்றும் சந்தோஷ் பணிக்கு வந்தனர். பிறகு அலுவலகம் தொடர்பான பிரச்னை காரணமாக காலை 10.45 மணிக்கு திடீரென இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கையில் வைத்திருந்த கத்தியால் விவேக்கை கொடூரமாக கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் விவேக் உதவி கேட்டு சத்தம் போட்டார். இருந்தாலும் சந்தோஷ் விடாமல் விவேக்கை கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க படுகொலை செய்தார்.

இதனால் அலுவலகத்தில் இருந்த சக ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். பின்னர் சம்பவம் குறித்து கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் படி எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சக ஊழியர் விவேக்கை கொலை செய்த சந்தோஷையும் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எழும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: