சயனபுரம் அரசு பள்ளியில் வழங்கப்பட்டது பிறந்தநாள் விழா சாக்லெட் சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்-நெமிலி அருகே பரபரப்பு

நெமிலி : நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவனின் பிறந்தநாளையொட்டி வழங்கிய சாக்லெட் சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த  சயனபுரம்  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 163 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவருக்கு தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தன்னுடன் பயிலும் 24 மாணவர்களுக்கு சாக்லெட்களை வழங்கி உள்ளார். அந்த சாக்லெட்களை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம், தலைவலி ஏற்படுகிறது என வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் வையாபுரி  தொலைபேசி மூலமாக  புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் ரதி தலைமையில் மருத்துவர் மணிகண்டன் மற்றும் மருத்துவ  குழுவினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து, மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  

அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த  ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, துணைத் தலைவர் தீனதயாளன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், பிடிஓ வேதமுத்து, தாசில்தார் சுமதி  ஆகியோர் விரைந்து வந்து, காலாவதியான சாக்லெட்டை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதா என விசாரித்தனர். இதில் மாணவர்கள் சாப்பிட்ட சாக்லெட் 2019 ஆண்டே  காலாவதியானது தெரியவந்தது.

மேலும், மாணவர்களுக்கு தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 2 மணி நேரத்திற்கு பிறகு மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். அதில் ஒரு மாணவருக்கு மட்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் உடனடியாக புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு அலறியடித்து ஓடி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த பிறகு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவனிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பின்னர், அங்கிருந்து சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கலெக்டர் மற்றும் அரக்கோணம்  ஏஎஸ்பி கிரிஷ்  யாதவ், ஆர்டிஓ பாத்திமா ஆகியோர் சென்று மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் நெமிலி இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்ஜீவுலு, சங்கர் ஆகியோர் சாக்லெட் வாங்கிய கடையில் சோதனை நடத்தி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவ துறையினர் கடையில் உணவுப்பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: