சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ராஜஸ்தான் உயர் நீதிமனற  தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இருந்தபோது, அவர் தலைமையில் கடந்த மாதம் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. அதில், சென்னை, கர்நாடகா உட்பட 6 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம்  ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் நியமனத்துக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

   ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பிவராலே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,  ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம்.மேக்ரே. ஜம்மு-காஷ்மீர் (லடாக்) கூடுதல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொலிஜியம் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி நிகில் காரியல், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ஆகியோரை பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மாற்றுவதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டால், ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் நீதிபதி மாற்றம் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இதை விசாரித்த நீதிபதி நிகில் கரியல், ஆளும் பாஜ அரசை கடுமையாக கண்டித்து, பல்வேறு கேள்விகளை கேட்டார். நேற்று முன்தினம் கூடிய கொலிஜியம், நீதிபதி நிகிலை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: