ஆங்கிலேயருக்கு பயந்து நடுங்கியவர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டு ராகுல் பரபரப்பு: உத்தவ் தாக்கரே நழுவல்

மும்பை: இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ஆங்கிலேயருக்கு சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடித நகலை வெளியிட்டு, ‘ஆங்கிலேயருக்கு உதவி செய்து பலனை அனுபவித்தவர் சாவர்க்கர்’ என சரமாரியாக சாடினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று அவர் அகோலாவில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு எழுதிய மன்னிப்பு கடித நகலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

்அந்தமான் சிறையில் இருந்தபோது சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதம் இதுதான். அந்த கடிதத்தில், ‘நான் உங்களுக்கு அடிபணிந்து தொடர்ந்து விசுவாசமாக இருப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார். அவர் இப்படி ஒரு கடிதத்தை எழுதி கையொப்பமிட்டு ஆங்கிலேயருக்கு அனுப்பியதன் காரணம், அச்சம்தான். இது, சாவர்க்கர் பற்றிய எனது கருத்து. மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல் ஆகியோர் பல ஆண்டுகளாக சிறையில் வாடியுள்ளனர். ஆனால், இப்படி ஒரு கடிதத்தை அவர்கள் ஒருபோதும் எழுதியதில்லை. சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியது மட்டுமின்றி, ஆங்கிலேய அரசின் ஓய்வூதியத்தையும் பெற்றுள்ளார்.

ஒன்றிய பாஜ அரசு, நாட்டில் வெறுப்பையும், பயத்தையும், கலவரத்தையும் பரப்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில்லை என்பதுபோல் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது ஒரு மேலோட்டமான கருத்துதான். ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஒரு போதும் பத்திரிகை, ஊடகங்கள், நீதித்துறை போன்றவற்றை கட்டுப்படுத்துவது கிடையாது. எதிரிகளாக இருந்தாலும் இரக்கம் காட்டுவதும், அன்பு பாராட்டுவதும் இந்தியாவின் பண்பாடு. எனது யாத்திரையும் இதைத்தான் செய்கிறது. அன்பு காட்டிக்கொண்ட கூட, உங்களுக்கு எதிரானவர்களை மாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘சாவர்க்கர் பற்றி ராகுல் கூறியுள்ள கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் சாவர்க்கரை மதிக்கிறோம்,’’ என்றார்.

போலீசில் பேரன் புகார்

ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் போலீசில் புகார் செய்துள்ளார் அதில், சாவர்க்கரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Related Stories: