சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலேயே போதிய எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்கள் இல்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மிகக்குறைவான எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பகுதி நேர பணியாளர்கள்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ஊரிலிருந்து அதிகபட்சம் 20 கிராமங்கள் வரை உள்ளன. இவையனைத்திலும் துப்புரவு பணியில் ஈடுபடும் அளவிற்கு பணியாளர் இல்லை. ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகராரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிப்பது, கழிவு நீர் தேங்காமல் செய்வது, டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பயன்படுத்தாமல் உள்ள பழைய பொருட்களில் நீர் தேங்கி அதில் கொசுக்கள் உருவாவதை தடுக்க அந்த பொருட்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் செய்ய போதிய பணியாளர்கள் இல்லை.

பருவ மழை காலத்தில் ஆங்காங்கு கழிவுநீருடன், மழைநீரும் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சில இடங்களில் மட்டுமே கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. இது குறித்து துப்புரவு பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘பணியாளர்கள் குறைவாக உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து பணி செய்ய நேரிடுகிறது. இதனால் மற்ற பகுதிகளில் குப்பை அள்ளுவது உள்ளிட்ட துப்புரவு பணிகள் பாதிப்படைகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் கிராம எண்ணிக்கை, மக்கள் தொகை அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: