சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல் எதிரொலி: எம்.எல்.ஏ ரூபி மனோகரனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பாக வரும் 24-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ. ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கடந்த 15 -ம் தேதி சென்னை காங்கிரஸ் அலுவலகத்தை மூற்றுகையிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் நெல்லையில் நியமிக்கப்பட்ட வட்டார தலைவர்கள் சிலரை நீக்கக்கோரி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரின் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டன. அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதல் மற்றும் கைக்கலப்பில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி 62 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, கட்சியின் பொருளாளரும் எம்.எல்.ஏ-வும் மான ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வரும் 24-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி நவம்பர் 15-ம்தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Stories: