நீதிபதி நிகில் கேரியலை பாட்னாற்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்த வழக்கறிஞர்கள்

சூரத்: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கேரியலை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலீஜியம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கேரியலை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து குஜராத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அரவிந்த் குமாரை அவரது அறையில் சந்தித்த 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிபதி நிகில் கேரியல் இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது பேசிய மூத்த வழக்கறிஞர்கள் நிகில் கேரியலை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்று தெரிவித்தனர். இந்நிலையில் அவசர பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வரும் திங்கட்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. இந்த தகவலை அறிந்த தலைமை நீதிபதி அரவிந்த் குமார், நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி தலைமை நீதிபதியிடம் தகவல் தெரிவித்த வழக்கறிஞர்கள் சங்கம், குஜராத்தில் இருந்து மாற்றப்பட்ட மேலும் 4 நீதிபதிகள் சார்பாகவும் தங்கள் பிரதிநிதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட போவதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த குஜராத் தலைமை நீதிபதி, நீதிமன்ற புறக்கணிப்பு என்பது நீதித்துறையின் நலனுக்கு எதிரானது என்றும் அந்த முடிவை வழக்கறிஞர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: