அரசு முறைகளில் எஸ்சி, எஸ்டி காலி பின்னடைவு பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நிரப்ப தடைகோரி வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: ஒன்றிய, மாநில அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கருப்பையா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10 ஆயிரத்து 402 அரசுப் பணியிடங்கள், பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப பல்வேறு விதிகளை வகுத்து கடந்த  ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான  பின்னடைவு காலி பணியிடங்களை, சிறப்பு தேர்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் தேர்வு முகமைகள், ஏராளமான தேர்வுகளை நடத்தி காலியிடங்களை நிரப்பி வருகிறது.

அதனால் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான  பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு தேர்வு நடத்தி நிரப்பாமல், காலியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தி நிரப்ப தடை விதிக்க வேண்டும். பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.கிருஷணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இப்போது, விசாரணையை தள்ளிவைக்கும்படி மனுதாரர்  கோரிக்கை வைத்தார். இதையடுத்து,  வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: