சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதலை விசாரிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு 24ம் தேதி கூடுகிறது

சென்னை: சத்தியமூர்த்திபவனில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, வரும் 24ம் தேதி இந்த குழு கூடி விசாரணை நடத்த உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் இரவு திடீரென காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரின் ஆதரவாளர் இருவரை வட்டார தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டனர். ஏராளமானோர் திரண்டு வந்திருந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. ரூபி மனோகரிடம், கே.எஸ்.அழகிரி, இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், வீட்டுக்கு புறப்பட்ட கே.எஸ்.அழகிரி மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் காரை முற்றுகையிட்டு மறித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். அழகிரியும் காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பிரிவு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலை சத்தியமூர்த்திபவனில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வந்திருந்தார். ஆனால் கே.எஸ்.அழகிரி வரவில்லை. அதற்குள், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாவட்ட தலைவர்கள், ‘‘கட்சி தலைமைக்கு எதிராக சத்திமூர்த்திபவனில் போராட்டக்காரர்களை தூண்டிய ரூபி மனோகரன் எம்எல்ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதில், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், ரஞ்சன் குமார், டில்லி பாபு, செங்கம் குமார், டீக்காராம் உள்ளிட்ட 63 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் தினேஷ் குண்டுராவிடம் வழங்கினர்.  இந்நிலையில், நேற்று மாலை கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவன் வந்தார்.

அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், ரூபி மனோகரன் எம்எல்ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி, தமிழக காங்கிரசில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இந்த தீர்மானம் பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி சத்தியமூர்த்திபவனில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சத்தியமூர்த்திபவனில் ஒரு சிறிய அசம்பாவிதம் நடந்தது சம்பந்தமாக மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை கொடுத்துள்ளனர்.

அதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளார்கள். எனவே, ஒழுங்கு நடவடிக்கை குழு வரும் 24ம் தேதி மதியம் 12 மணிக்கு சத்தியமூர்த்திபவனில் கூடி அதை பற்றி விசாரிக்க உரிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்’’ என்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி இருக்கிறோம். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை வந்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை மிகவும் முக்கியமானது. தற்போது கட்சி ஒழுங்கு மீறப்பட்டுள்ளது. அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Related Stories: