முல்லை பெரியாறு அணை பராமரிப்பிற்கு மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய வழக்கு..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அம்மாநில வனத்துறை கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால் கேரள மாநில அரசு திடீரென அந்த அனுமதியை ரத்து செய்தது.

முல்லை பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பகுதியில் சாலை அமைக்கவும் கேரளா, இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, முல்லை பெரியாறு அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட ஏற்கனவே அளிக்கப்பட்ட அனுமதியை மீண்டும் பெற்றுத்தர கோரப்பட்டுள்ளது. மேலும் வல்லக்கடவு வழியாக செல்ல 5 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

அணையின் பராமரிப்பிற்கு தேவையான கட்டுமான இயந்திரங்களை கொண்டு செல்லவும், அணை அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் கருவிகளை அமைக்கவும், அங்குள்ள பழைய படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

Related Stories: