காட்பாடியில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாமில் திரண்ட 9 மாவட்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாதவர்கள் ஏமாற்றம்

வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உரிய சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவத்திற்கு அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர்(பெண் ராணுவ காவல் பணி), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) மற்றும் ஜேசிஓ(மத போதகர்) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேரடி ஆட்சேர்ப்பின் போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு அனைத்து ஆவணங்களையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு வர வேண்டும்.

மேலும் எவ்விதமான தனி நபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை நடந்த ஆட்சேர்ப்பு முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்றுமுன்தினம் முதலே ஆட்சேர்ப்பு நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே திரண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் ஆட்சேர்ப்பு பணி தொடங்கியது. முதலில் உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து ஓட்ட பரிசோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.  இளைஞர்கள் பலரும் போதிய சான்றிதழ் இல்லாமல் முதற்கட்ட தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Related Stories: