கோயில் யானை குறித்து பீட்டா அமைப்பு அவதூறு வீடியோ: தமிழக அரசு எச்சரிக்கை

கவுகாத்தி: கோயில் யானை துன்புறத்தப்படுவதாக பீடா தொடர்ந்து அவதூறு வீடியோ வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாமில் மாநிலத்தில் இருந்து 9 யானைகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு கோயில்களில் உள்ளன. அசாமை சேர்ந்த ஜாய்மாலா என்ற யானை ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார் கோயிலில் உள்ளது. இந்த யானை அடித்து கொடுமைப்படுத்துவது போன்ற வீடியோவை சமீபத்தில் பீடா வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று கவுகாத்தியில் பீடா இந்தியாவின் பிரசார மேலாளர் ராதிகா சூர்யவன்ஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘அக்டோபர் 20 முதல் நவம்பர் 13 வரை ஜாய்மாலாவின் தினசரி வழக்கத்தை நாங்கள் அவ்வப்போது கண்காணித்து வந்தோம். அவள் மகிழ்வதாகக் காட்டப்பட்ட குளத்தில் இப்போது தண்ணீர் இல்லை, அவள் இன்னும் தனிமைச் சிறையில் இருக்கிறாள். ஜாய்மாலாவின் கால்களில் காயங்கள் உள்ளது. தற்போது சங்கிலியால் கட்டபட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன், ‘யானை முற்றிலும் நலமாக உள்ளது. இது பழைய வீடியோ மீண்டும் வெளிவருகிறது. தீங்கிழைக்கும் வகையில் தோன்றும் பீட்டாவின் நோக்கம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள யானைகள் மற்றும் கோயில்களை குறிவைத்து அதே வீடியோ  மீண்டும் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவதூறு செய்தால்,  சட்டப்படி அவர்களை கையாள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: