கல்வியில் இந்துத்துவா கொண்டு வர கவர்னர்கள் மூலம் பாஜ முயற்சி: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை சிவானந்தா காலனி மைதானத்தில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: குஜராத், இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். தமிழகம், கேரளாவில் கவர்னர்கள் வேந்தர்களாக செயல்பட்டு பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த பார்க்கின்றனர். கல்வியில் இந்துத்துவாவை கொண்டு வர கவர்னர்கள் மூலம் முயற்சி செய்கின்றனர். இன்று (நேற்று) கோவை வர்த்தக சங்கங்கள் என்னிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

வழக்கமாக கம்யூனிஸ்ட்காரர்களை அவர்கள் அழைப்பதில்லை. ஆனால் இந்த முறை அழைத்து, ஜிஎஸ்.டி. வரி உள்பட ஒன்றிய அரசின் கொள்கைகளால் தொழில் துறையில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்தனர். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பம்ப் உற்பத்தியில் ஈடுபடுமோ? என்ற அச்சத்தை தெரிவித்தனர். கோவையில் ஜவுளித் துறை ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்பை தெரிவித்தனர். பம்ப் செட்டின் மிகப்பெரிய நுகர்வோர் விவசாயிகள். இந்தியாவில் உணவு பொருட்கள் மீது வரி விதிப்பு இதுவரை இருந்ததில்லை. நான் கோவையில் சாப்பிட்ட அப்பளத்தின் மீது கூட ஜி.எஸ்.டி. விதித்துள்ளார்கள். அனைத்து உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி பேசினார்.

Related Stories: