மசாஜ் சென்டர் பெயரில் குமரியில் மீண்டும் கொடி கட்டி பறக்கும் பாலியல் தொழில்: ரூ.1,500 முதல் 5 ஆயிரம் வரை பேக்கேஜ், அதிரடி காட்டுவாரா எஸ்.பி.?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர்கள் பெயரில் மீண்டும் விபசாரம் கொடி கட்ட தொடங்கி உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மசாஜ் சென்டர்கள் தொடங்க பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உள்ளன. உரிய அனுமதி மற்றும் பயிற்சி முடித்தவர்கள் தான் இதில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல், விதிமுறை மாறாக இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றமே அனுமதி அளித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கை காரணமாக சற்று ஓய்ந்திருந்த பாலியல் தொழில், மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் மீண்டும் கொடி கட்டி பறக்க தொடங்கி உள்ளது. பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து, ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் இளைஞர்களை வரவழைத்து, இளம்பெண்களை காட்டி மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் அரங்கேறி வருகிறது. இதற்காக பல்வேறு விதமான பேக்கேஜ் சிஸ்டம் கடைபிடிக்கிறார்கள். ரூ.1500 ல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாகர்கோவிலில் ஒரு சலூன் கடையில் வெளி மாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட 2 இளம்பெண்களும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சலூன் கடைக்கு ரெகுலராக கட்டிங், சேவிங் செய்ய வருபவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளனர். பல முக்கிய வி.ஐ.பி.க்கள் பலரும் இந்த சலூன் கடைக்கு கஸ்டமர்களாகி உள்ளனர். அவர்களிடம் இளம்பெண்களை காட்டி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் பெயரில் மீண்டும் விபசாரம் கொடி கட்டி பறக்க தொடங்கி இருப்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் மட்டுமின்றி மாவட்டம் முழுவமே சில இடங்களில் போலியாக மசாஜ் சென்டர்கள் மீண்டும் முளைக்க தொடங்கி உள்ளன. இவர்கள் ரகசியமாக விபசாரத்தில் இளம்பெண்கள், வாலிபர்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். கேரளா, கர்நாடகம், உ.பி. உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து  வந்து பயன்படுத்துகிறார்கள்.  தற்போது காவல்துறையும் இந்த விவகாரத்தை கண்டு கொள்வதில்லை. புகையிலை, கஞ்சா என தனிப்படையினரின் கவனமும் வேறு பக்கம் திரும்பி உள்ளதால் பாலியல் தொழில் கும்பல் எந்த வித இடையூறும் இல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை குவித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிடுவாரா? என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

* வி.ஐ.பி.க்கள் ஏரியா, ரிசார்ட்டுகள் குறி

வீடுகளை வாடகை பிடித்து மசாஜ் சென்டர்கள் தொடங்க விஐபிக்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தான் இந்த கும்பல் தேர்வு செய்கிறது. நாகர்கோவிலை பொறுத்தவரை நேசமணி நகர் காவல் நிலைய பகுதியில் தான் இந்த கும்பலின் பார்வை அதிகமாக உள்ளது. இதே  போல் மாவட்டத்தில் உள்ள சில தனியார் ரிசார்ட்டுகளும் அனுமதியின்றி மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக சிறப்பு ஆபரேஷன் நடத்த உத்தரவிட்டால், இந்த கும்பல்களை கைது செய்ய முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

* காவல்துறையிலும் கருப்பு ஆடுகள்

குமரி மாவட்ட காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கூட மசாஜ் சென்டர்  நடத்துபவருடன் ரகசிய தொடர்பில் உள்ளனர். எனவே காவல்துறை நடவடிக்கைக்கு முயன்றாலே, சம்பந்தப்பட்ட நபர்களின் கவனத்துக்கு தகவல்கள் சென்று விடுகிறது. இதனால் எளிதில் அவர்கள் தப்பி விடுவார்கள். எனவே முதலில் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: