பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக விளங்குகிறது: பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மண்டப சுவர்களில் அருவியாய் வரும் மழைநீர்

ஸ்ரீகாளஹஸ்தி:  பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மண்டப சுவர்களில் லேசான மழை பெய்ததால், அருவி போல மழைநீர் சொட்டுகிறது. இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாகவும், சுயம்புவாகவும் வீற்றிருக்கும் திவ்ய ஷேத்திரம், புண்ணிஷேத்திரமாகவும் விளங்குகிறது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலின் சரித்திர ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, சோழர் மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 1905ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கொட்டு செட்டியார் ₹10 லட்சம் செலவில் கோயிலை சீரமைக்கும் பணியை செய்தனர்.  இக்கோயில் பழமை வாய்ந்தது என்றாலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரையிலும் கோயிலின் கட்டிடம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. மேலும் கோயிலுக்குள் கல் சிற்பங்கள் அப்போதைய பொறியாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் நுணுக்கமானதாகவும் தரமானதாகவும் இருக்கின்றது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை கோயிலை சீரமைக்கும் பணியை மாநில அறநிலைத்துறையினர் மேற்கொண்டனர்.

ஆனால் எந்தவித பயனும் இல்லை. மேலும் பழமை வாய்ந்த கட்டிடம்  ஆபத்திற்குள்ளாகி உள்ளன. இதனை கவனத்தில் கொள்ள வேண்டிய அதிகாரிகள் ‘டேக் இட் ஈஸி’ என்பது போல் கவனக்குறைவோடு இருந்து வருவதாக பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் கோயிலின் வருமானம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் கொள்ளும் அறநிலையத்துறை கோயிலை பாதுகாப்பதில் கவனத்தை கொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம் என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.சரித்திரம் மிகுந்த கோயிலான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சிறிய அளவில் பெய்யும் மழைக்கே கோயிலின் மேல் கூரையிலிருந்து மழை நீர் சொட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயிலின் வலது புறம் பக்த கண்ணப்பர் கோயிலுக்கு செல்ல மலையை உடைத்து மலை மீதுள்ள கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி செய்ததால் கோயிலின்  சுவரிலிருந்து (மழை)நீர் உள்ளே நுழைந்தது. இதனால்  கோயில் மழை நீரால் நிரம்பியது. இதனை சரி செய்வதற்காக பொறியியல் துறையினர் லட்சக்கணக்கில் செலவிட்டனர். கோயிலின் சுவர் ஓரத்தில் கால்வாய் நிர்மாணித்தனர். பழங்காலத்தில் கைலாச கிரி எனப்படும் கண்ணப்பர் மலை மீது  கோயிலை கட்டினர். ஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் அதிகளவில் புயல், மழை வந்தாலும் கோயிலில் தண்ணீர் சொட்டுவது என்பது இதுவரை நடந்தது இல்லை.

ஆனால் தற்போது சிறிய மழைக்கும் கோயிலுக்குள் மற்றும் கோயிலுக்குள் உள்ள மண்டபங்களில் மழை நீர் அருவி போல் கொட்டுவது பக்தர்களின் மனநிலையை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிகண்டேஸ்வரர் கோயில் சீரமைக்கும் பணி நடந்தது. ஆனால் எந்தவித பலனும் இல்லை. சீரமைப்பு பணி முடிந்த பகுதியிலும் மழை நீர் சொட்டுவது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறந்த பொறியாளர்கள் மூலம் நவீன கட்டமைப்புகளால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மண்டபங்களை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராகு, கேது தோஷம் நீங்கும் பரிகாரம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராகு, கேது தோஷம் நீங்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஜாதகத்தில் ராகு, கேது சரியான இடத்தில் அமையாமல் இருப்பதால் திருமணம், தகுந்த வேலை, குழந்தை பேறு போன்றவை தள்ளிப்போவதை இங்கு செய்யும் பரிகார பூஜை மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இதனால் இதுபோன்ற பரிகாரம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் கோயில் உண்டியலிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மாதத்துக்கு கோயில் வருமானம் ₹1 கோடிக்கு மேல் வருகிறது. சில மாதங்கள் ₹2 கோடியையும் வருமானம் தாண்டியுள்ளது. எனவே வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதன் மூலம் கோயிலை சீரமைப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியம் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகாரிகள் கவனக்குறைவால் இடிந்து விழுந்த ராஜகோபுரம்

கடந்த 1516ம் ஆண்டில் ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட சரித்திரம் வாய்ந்த ஸ்ரீகாளஹஸ்தி கோயிலின் 136 அடி உயர ராஜகோபுரம் கடந்த 2010ம் ஆண்டு இடிந்து விழுந்தது. பின்னர் கோடிக்கணக்கில் செலவழித்து 146 அடி உயர ராஜகோபுரம் கடந்த 2017ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மகா யாகம் நடத்தப்பட்ட ராஜகோபுரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே இருந்த ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு அதிகாரிகள் கவனக்குறைவுதான் காரணம் என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தது. எனவே மீண்டும் கோயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

ஸ்ரீகாளஹஸ்தி பெயர் காரணம்

இக்கோயிலில் சிலந்தி, பாம்பு, யானை என்ப சிவலிங்கத்தை பூஜித்ததாகவும், அவைகளுக்கு சிவன் முக்தி கொடுத்ததாகவும் புராணம் கூறுகிறது. ஸ்ரீ என்றால் சிலந்தி, பாம்பு என்பது காள என்றும், அஸ்தி என்பது யானை என்றும் இணைந்து ஸ்ரீகாளஹஸ்தி என பெயர் பெற்றுள்ளது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* அப்பர் இங்குள்ள இறைவனை காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார்.

* இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில்.

* மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டு கோயில்களுள் இதுவும் ஒன்று.

* நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன.

* 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளது.

* சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.

* 12ம் நூற்றாண்டில் மன்னன் வீரநரமிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைத்து, நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டியுள்ளார்.

* கி.பி. 1,516ம் ஆண்டை சேர்ந்த விஜயநகர பேரரசர் கிருட்டிண தேவராயன், நூற்றுக்கால் மண்டபம் ஒன்றையும், மேற்கு புற கோபுரத்தையும் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

* அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோயிலின் தல மரங்களாக விளங்குகிறது.

* தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான ராஜேந்திர சோழன் இந்த கோயிலை கட்டியதாக வரலாறு உள்ளது.

Related Stories: