ஆற்காடு பகுதியில் தொடர் மழை எதிரொலி: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் தொடர் மழை காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

அதன்படி ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஆற்காடு-செய்யாறு சாலையில் உள்ள மாங்காடு பகுதியில் சாலையோரம் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் நேற்று வேரோடு சாய்ந்தது. சாலையின் மறுபக்கம் சாய்ந்ததால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து, விஏஓ மஞ்சுநாதன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை ஏலம் விட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

Related Stories: